மனமகிழ்மன்றங்களை காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கவேண்டாம் என்பதை வலியுறுத்தியும், சி.ஐ.டி.யு.வின் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் நிர்வாகி அனுமதிபெறாமல் சர்ச்சை பேட்டி கொடுத்தார் என கூறி அவர்மேல் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்தும் சி.ஐ.டி.யு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர் ஜான் என்கிற ராதாகிருஷ்ணன் தனியார் இணையதள ஊடகத்தில் டாஸ்மாக் செயல்பாடுகள் பற்றி பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு தொழிற்சங்க நிர்வாகி என்கிற முறையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் பரவியது.
அவர் கொடுத்த பேட்டிக்கு முன் அனுமதி பெறவில்லை என்பதாலும், பேட்டி அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக தவறான கருத்துகளை கொண்டதாகவும் , டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது. இதை அடுத்து அவர் மேல் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, தற்காலிக பணிநீக்கம் செய்தது.
இந்த நடவடிக்கை தொழிற்சங்க விரோத பழிவாங்கல் என விமர்சித்து, இந்த நடவடிக்கையை திரும்பபெற வேண்டும் என இன்று சி.ஐ.டி.யு. கோவை மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இத்துடன் மனமகிழ்மன்றங்கள் மூலம் தனியாருக்கு அரசு வருவாய் செல்வதை தடுக்கவேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ” த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்குள் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடியது.”
“ஆனால் அதே 500 மீட்டர் விதிகளுக்குட்பட்ட தனியார் மதுக்கடைகளை மனமகிழ்மன்றங்களை காலை 11.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதும், புதிய மனமகிழ்மன்றங்களுக்கு அனுமதி பெற சிறப்பு கட்டணத்தை உயர்த்தி, தனியார் முதலாளிகளுக்கு அரசு வருவாயை மடைமாற்றம் செய்வதை த.வெ.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்,” என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

