வரவிருக்கும் அறுவடை காலத்தில் மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2,200 முதல் ரூ.2,400 வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்காச்சோளத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கால்நடை மற்றும் கோழித்தீவனம், தொழில்துறை பயன்பாடு, எத்தனால் உற்பத்தி, உயிர் நெகிழி தயாரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இது முக்கிய வர்த்தகப் பயிராக உள்ளது.

இந்திய அரசின் மூன்றாவது மதிப்பீட்டின்படி, 2025-26 ஆம் ஆண்டில் நாட்டில் 10.74 மில்லியன் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு, 55.10 மில்லியன் டன் உற்பத்தி கிடைத்துள்ளது.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படும் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் உற்பத்தியை குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2025-26 ஆம் ஆண்டில் சுமார் 0.54 மில்லியன் ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு, 3.3 மில்லியன் டன் உற்பத்தி கிடைத்துள்ளது. இது மாநிலத் தேவையின் சுமார் 50 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்வதால், மீதமுள்ள தேவைக்காக பிற மாநிலங்களை தமிழகம் நம்பியுள்ளது. சேலம், நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மையத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவு மையம், உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை சந்தையின் கடந்த 15 ஆண்டுகளுக்கான விலை நிலவரத்தை ஆய்வு செய்துள்ளது.

அதன் அடிப்படையில், வரவிருக்கும் அறுவடை காலத்தில் நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,200 முதல் ரூ.2,400 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் தங்களது விதைப்பு மற்றும் சாகுபடி முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.