கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள இடங்களில் உருவாகும் குப்பைகளை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு எடுத்துவராமல் அவை உருவாகும் இடங்களிலேயே அதை மேலாண்மை செய்ய தேவைப்படும் கட்டமைப்பை ஏற்படுத்தி அழித்தால் தான் குப்பைக்கிடங்கால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா-விடம் வெள்ளலூர் பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் கூறியுள்ளார்.

இன்று (செவ்வாய் – 7.7.26) கோவை மாநகராட்சி ஆணையர் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குப்பை கிடங்கு பிரச்சனைகள் பற்றி அவரிடம் மனுகொடுத்து வந்ததை அடுத்து அங்கு ஆய்வு செய்ய நேரில் சென்றார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து குறிச்சி–வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் K.S. மோகன் கூறியதாவது:-

குப்பை மற்றும் துர்நாற்றப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில், அந்தந்த பகுதிகளிலேயே அறிவியல் அடிப்படையில் குப்பைகளை செயலாக்கும் பரவலாக்கப்பட்ட (Decentralized) திடக்கழிவு மேலாண்மை முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
Vellaloredumpyar scaled

மேலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தொடர்ந்து கலப்புக் கழிவுகள் குவிக்கப்படுவதால் கடும் துர்நாற்றம் மட்டுமல்லாமல், குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுநீர் (Leachate) காரணமாக நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் தீவிரமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினோம்.

இதனால் மகாலிங்கபுரம், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகரின் ஒரு பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தோம். இவற்றை அவரிடம் எடுத்துக்கூறி சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும், நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணையரை வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.