10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை – பெங்களூரு இடையே தினசரி இரவு ரயில் சேவை வேண்டும் என நிலுவையில் உள்ள கோரிக்கை தற்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னணி தொழில் கூட்டமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஐ. அமைப்பின் கோவை கிளையின் ‘கோயம்புத்தூர் நெக்ஸ்ட்’ பிரிவு சார்பில் தெற்கு ரயில்வே-விடம் இதுபற்றி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை பெங்களூரு வழித்தடம் இடையே 9 ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. இதில் 3 ரயில் சேவைகள் (உதய் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மும்பை எக்ஸ்பிரஸ்) நேரடி ரயில் சேவைகளாக உள்ளன. இதைத்தவிர 6 தினசரி ரயில் சேவைகள் கோவையை பெங்களூருடன் இணைத்து வருகின்றன. இந்த 6 சேவைகளில் 2 இரவு ரயில்களாக உள்ளன.
இதில் ஒன்று கோவை வழியே கன்னியாகுமரி முதல் பெங்களூரு வரை செல்லும் ரயிலாகவும், மற்றொன்று கோவை வழியே கேரளாவில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலாகவும் உள்ளன. இரண்டுமே கோவைக்கு தினம் இரவு சுமார் 11 மணிக்கு வருகின்றன. ஆனால் இவை கோவையிலிருந்து பெங்களூரு புறப்படும் நேரடி ரயில்கள் அல்ல என்பதை கவனிக்கவேண்டும்.
இதைத் தவிர வாரம் 5 முறை வடக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வழியே பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் நிலையம் வரை இயக்கப்படும் ரயில் சேவை ஒன்றும் உள்ளது. இது ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி இயங்குகிறது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கோவை மற்றும் பெங்களூரு இடையே தினசரி இரவு ரயில் சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் ‘கோயம்புத்தூர் நெக்ஸ்ட்’ பிரிவு இதை தெற்கு ரயில்வேவிடம் கோரிக்கையாக முன்வைத்து இந்த சேவையை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ரயில் சேவையானது கோவையிலிருந்து துவங்கி பெங்களூரு வழியே ஹாசன் நகரை இணைக்கும் ரயில் சேவையாக வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.சி. பெங்களூரு நகர ரயில் நிலையம் காலை மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த நெரிசலாக காணப்படும். பிளாட்பார்ம்களில் நிலவும் நெரிசலாலே ரயில்களை பிடிப்பது சிரமமாகிறது. ஹாசன் நகர் பெங்களூருவை அடுத்து சுமார் 170 கிமீ வழியே உள்ளது. இந்த சேவையை வழங்குவதன் மூலம் பெங்களூரு ஹாசன் இடையேயும் நல்ல இணைப்பை ஏற்படுத்தமுடியும் என ‘கோயம்புத்தூர் நெக்ஸ்ட்’ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதுபோலவே கோவை பெங்களூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை குப்பம் வழியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் வந்தே பாரத் ரயில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு குப்பம் வழியே பெங்களூர் அடையும் போது, அந்த சேவை காலை 11:30 மணிக்கு பெங்களூரை அடையும். மறுபுறம் பெங்களூரில் இருந்து மாலை 4 மணிக்கு அந்த ரயில் சேவை புறப்பட்டு இரவு 9.30 க்கு கோவை வந்தடையும்.
மேலும் கோவை பெங்களூரை இணைக்கும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஓசூர் வழியே இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலின் புறப்படும் நேரத்தை காலை 5:30 மணிக்கு மாற்றி பெங்களூரை மதியம் 12:30 க்கு சென்றடையும்படி அமைக்க வேண்டும் எனவும் மறு வழியே மதியம் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை இரவு 9 மணிக்கு கோவை வந்தடையுமாறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த ரயில் சேவையை மாற்றி அமைக்கும் போது, இதனால் மாணவர்கள், தொழில்துறையினர், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் பயனடைவார்கள் என்று ‘கோவை நெக்ஸ்ட்’ அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது.

