கோவை மாநகரத்தை போதை பொருள் பயன்பாடு இல்லாத மாநகரமாக உருவாக்கவேண்டும் எனும் நோக்கில் கோவை மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான ஜூன் 26, கோவை மாநகர காவல் துறை சார்பில் ரேஸ்கோர்ஸ் (பந்தைய சாலை) பகுதி சாலைகளின் பல்வேறு இடங்களில் ‘போதை பொருள் இல்லாத மண்டலம்’ (Drug Free Zone) எனும் வார்த்தைகள் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ரேஸ்கோர்ஸ் என்பது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய விரும்பும் ஆண், பெண், இளைஞர்கள் முதியவர்கள் பலரும் கூடும் இடமாக உள்ளது. இங்கு அதிக அளவிலான சிற்றுண்டி கடைகள், உணவகங்கள் உள்ளன. இங்குள்ள சிறு சாலைகளில் இளைஞர்கள் சிலர் கூடி, போதை பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், இன்று சாலைகளில் வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு செய்தி என்பது இதுபோன்ற நபர்களுக்கு எச்சரிக்கை செய்தியாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த வழியே வரும் நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கைகள் காவல் துறையால் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

