சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலை வளாகத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது.
காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், சத்குரு தொடங்கிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணிக்குப் பின், விவசாயிகளிடம் ‘மரம் சார்ந்த விவசாயம்’ குறித்த விழிப்புணர்வு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால், எங்களது நர்சரிகளில் மரக்கன்றுகளுக்கான தேவை உயர்ந்து, உற்பத்தியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவசாய முறை மூலம் மண் வளம், மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன், நதிநீர் வளம் ஆகியவை மேம்படுவதுடன், விவசாயிகளின் வருமானமும் கணிசமாக உயர்கிறது என்றார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பேசுகையில், 1970-களில் ஒரு கிலோ யூரியா பயன்படுத்தி 30 கிலோ கோதுமை மகசூல் கிடைத்தது. ஆனால், இன்று அதே ஒரு கிலோவிற்கு 5 கிலோ மட்டுமே கிடைக்கிறது. அளவுக்கு அதிகமான ரசாயன உரப் பயன்பாட்டினால் மண்ணின் கரிமச் சத்து பெருமளவு குறைந்து, மண் வளம் சீர்கெட்டுள்ளது. மண்ணின் வளம் இழந்த பிறகு, நாம் எவ்வளவு உரங்களைக் கொட்டினாலும் மகசூலை அதிகரிக்க முடியாது. இந்தச் சூழலில் மரம் சார்ந்த விவசாயம் மிகவும் அவசியமாகிறது எனக் கூறினார்.
ஆந்திராவின் அனந்தபூரில் வெற்றிகரமாக ஆப்பிள் சாகுபடி செய்து வரும் விவசாயி ரமணா ரெட்டி, சமவெளியிலும் ஆப்பிள் சாகுபடி குறித்த தகவல்களைப் பகிர்ந்தார். பப்பாளியில் லாபம் ஈட்டுவது குறித்த தொழில்நுட்பங்களை வேளாண் விஞ்ஞானி சரவணன், 100-க்கும் மேற்பட்ட பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை முன்னாள் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஹரிதாஸ் ஆகியோர் விளக்கினர். தென்னைக்குள் உணவுக்காடு அமைப்பது குறித்து முனைவர் பாலமோகன் பேசினார்.
குறிப்பாக, ஒரே மரத்தில் 300 மாம்பழ வகைகளை உருவாக்கிச் சாதனை படைத்த இந்தியாவின் ‘மேங்கோ மேன்’ பத்மஸ்ரீ கலீம் உல்லா கான், மாம்பழ சாகுபடியில் தனது நீண்டகால அனுபவங்களையும் வெற்றி ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டார். கண்காட்சியில், 60-க்கும் மேற்பட்ட வாழை ரகங்களும், 100-க்கும் மேற்பட்ட மா மற்றும் பலா ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
