ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு கோவை மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார். புதிதாக கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கட்ட ரவி தேஜா ஐ.ஏ.எஸ். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மனு கொடுக்க வரும் பொது மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் குறிச்சி வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக் குழுவினர் தங்களது கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர்.
அதில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
கோவை மாநகராட்சியால் தினசரி சேகரிக்கப்படும் சுமார் 1,200 டன் திடக்கழிவுகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக சுகாதாரமற்ற முறையில் தேக்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, காற்றின் திசையைப் பொறுத்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவு வரை துர்நாற்றம் பரவி வருகிறது. மேலும், மகாலிங்கபுரம், கொணவாயக்காளையம், ஸ்ரீ ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆழ்குழாய் நீர் ஈடுமையான மஞ்சள் நிறமாக மாறி, மக்கள் அந்தீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கு எண் 254/2011 இல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்னம அமரவு 03.10.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அமைத்துள் இடத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கடந்த காலத்தில் பதவி வகித்த பல ஆணையாளர்கள் குப்பைக் கிடங்கை மேம்படுத்துவதாகக் கூறி காலதாமதம் செய்தனரே தவிர, தீர்ப்பின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்சினை நீடித்து வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
மேலும் 2004 ஆம் ஆண்டு அமலுக்கு வந்துள்ள புதிய திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளின் அடிப்படை நோக்கத்தின்படி, கழிவுகளை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் சென்று மாபெரும் குப்பைக் கிடங்குகளில் கொட்டும் நடைமுறையைத் தவிர்த்து, அந்தந்த மண்டலங்களிலேயே தரம் பிரித்து அறிவியல் முறையில் மேலாண்மை செய்ய வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகளை வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் மூலத்திலேயே தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் அதற்கு பதிலாக. பயோ மைனிங் பணிகளை விரைவுபடுத்தி, பல ஆண்டுகளாக தேங்கியுள்ள பழைய குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கோவை மாநகராட்சி அளித்த உறுதிமொழிப்படி தற்போது சென்னை பசுமை தீர்ப்பாய அமர்வில் சமர்ப்பித்த உறுதி வழங்கியபடி பயோ மைனிங் பணிகள் நிறைவேற்றப்படாமல் இன்றளவும் காலதாமதம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்களின் நலன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் புதிய குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் உள்ளூர் அளவிலேயே திடக்கழிவு மேலாண்மை மையங்களை அமைத்து கழிவுகளை அறிவியல் முறையில் நிர்வகிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தாங்கள், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு மற்றும் அதனைச் சுற்றி வசித்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளீர்கள் என நம்புகிறோம்.

