கோவை சித்தாபுதூர் சிக்னல் அருகே தனியார் குழந்தைகள் மருத்துவமனை அமைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்த மருத்துவமனைக்கு அருகே டாஸ்மாக் மதுக்கடை ஒன்று பார் வசதி உடன் இயங்கி வந்துள்ளது.

இந்த மதுக்கடைக்கு வருபவர்களில் சிலர் மது அருந்தி போதையில் மருத்துவமனைக்கு அருகே தரையில் உறங்கி விடுகின்றனர். சிலர் அசுத்தங்களையும் செய்கின்றனர், மேலும் சிலர் மருத்துவமனைக்குள் போதையில் நுழையும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், பெற்றோர் சங்கடத்துக்குள்ளும் சிரமத்துக்குள்ளும் ஆகி இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சி அமைத்ததும், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய், பள்ளிகள், வழிபாடு தளங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் உள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.

இதை கண்டு நம்பிக்கை பெற்ற அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை இந்த மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை பற்றி மனு மூலம் முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அரசு அந்த டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பாரை மூடியுள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக மருத்துவர் கார்த்திக் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து முதலமைச்சருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதுபோல தமிழகத்தின் பல இடங்களில் இருந்து முதலமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.