தங்கம் வாங்குவதை 1 ஆண்டுக்கு தவிர்க்குமாறு பிரதமர் அறிவுறுத்திய நிலையில் இதுபோன்ற முடிவை துறை சார்ந்தவர்களை ஆலோசித்தபின் அறிவிப்பு செய்ய வேண்டும் என கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராமன் கூறியதாவது :-
தற்போது நிலவக்கூடிய உலக அரசியல் சூழலலை கருத்தில் கொண்டு பிரதமர் 1 ஆண்டுக்கு தங்கம் வாங்கவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் முன் இந்தத் துறை சார்ந்த இருக்கக்கூடிய மக்களினுடைய வாழ்வாதாரத்தை மத்திய அரசு கவனிக்க வேண்டும்.
இப்போது தங்கத்தை இறக்குமதி செய்வதால் அந்நியச்செலாவணி பாதிப்புக்கு உள்ளாகிறது என்றால் அதற்கான மாற்று வழி என்ன என்பதை மத்திய அரசு பார்க்க வேண்டும். துவக்கத்திலேயே நகையை ஓராண்டுக்கு வாங்க வேண்டாம் என்கிற அறிவிப்பு, தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் 5 கோடி மக்களின் எதிர்காலத்தை சோதித்துப்பார்க்கக்கூடிய செயலாக அமைந்துவிடும். எனவே பிரதமர் இந்த செய்தியை திரும்ப பெற்றுக் கொண்டால் நலமாக இருக்கும்.
நாட்டின் வழிகாட்டியான பிரதமர் சொல்லுவதை நுகர்வோர் 50% பேர் கேட்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட அதனால் பெரிய தாக்கம் இருக்கும். தங்கத்தை இப்போதைய சூழல் காரணத்தால் இறக்குமதி செய்ய சவால்கள் இருக்கிறது என்றால், இந்த துறையில் ஈடுபடுவோருக்கும், அரசுக்கும் பாதிப்பு இல்லாமல் என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசித்திருக்கலாம்.
மத்திய அரசுக்கு சங்கத்தின் கோரிக்கைகள் :-
- ஒரு ஆண்டுக்கு நாம் 700 டன் தங்கத்தை இறக்குமதி செய்கின்றோம் என்றால், இப்போதைய சூழல் காரணமாக 500 டன்னை மட்டும் இறக்குமதி செய்யலாம். இந்த 500 டன்னில் விழா காலங்களில் எவ்வளவை பயன்படுத்தலாம், விழா காலங்கள் இல்லாத நேரத்தில் எவ்வளவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறினால் அதைக் ஏற்றுக்கொள்ளலாம்.
- பணத்தை தங்கமாக முதலீடு செய்ய விரும்புவோரின் சிலர் தங்க நகையாக அல்லாமல் தங்க கட்டிகளாக வாங்கி வைக்கின்றனர். எனவே இப்போதைய நிலையில், தங்க கட்டி விற்பனையாளர்களும் வியாபாரிகளும் பதிவு செய்யாத நுகர்வோருக்கு தங்கத்தை தங்க கட்டிகளாக விற்பனை செய்யக் கூடாது. இதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
- தங்க நகையை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதை சரியாக நடைபெறுகிறது என்று பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் உள்ள வியாபாரிகளுக்கு கட்டிகளை விற்கலாமே தவிர பொது மக்களுக்கு விற்க்கக்கூடாது. அப்படி யாராவது 24 கேரட் கட்டித்தங்கம் வைத்திருந்தால் அதை வெளியே கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் போது கட்டிகள் வெளியே வரும். அது சந்தைக்கு பிரயோஜனமாக இருக்கும்.

