தமிழ்நாட்டில் இந்த வார இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக கேரளத்தில் ஜூன் 1ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலேயே ஆரம்பிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகள் பகுதிகளில் இந்த வார இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை துவங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடதிசை நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியின் மையப்பகுதிகளில் இருந்து மரத்வாடா வரை, வட தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.