“இதெல்லாம் கேமிங் உலகில் நடக்குமா?” என்றால் “ஏன் நடக்காது?” என காட்டியிருக்கிறது சென்னையை சேர்ந்த அயெல்ட் ஸ்டூடியோ. ‘சன் ஆப் தஞ்சை’ எனும் புதிய தமிழ் வீடியோ கேமை உருவாக்கியுள்ளது.

இந்த வீடியோ கேம் விரைவில் சோனி பிளே ஸ்டேஷன், மைக்ரோசாப்ட் எக்ஸ்-பாக்ஸ் ஆகிய பிரபல வீடியோ கேம் அமைப்புகளில் வெளிவருகிறது. இதற்கு பிரபல பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். .

நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவை ஆட்சி செய்த சோழப் பேரரசைப் பற்றிய கதைகளைக் கேட்டு நான் வளர்ந்தேன். தமிழகத்தில் இருந்து சீனா மற்றும் ரோம் வரை வர்த்தக உறவுகளை ஏற்படுத்திய அந்த பேரரசின் அழகை,  அந்த உலகத்தை நான் ஒரு விளையாட்டில் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. அதனால்தான் நாங்கள் ‘சன் ஆஃப் தஞ்சை’யை உருவாக்குகினோம் என்கிறார் ஆப்ரஹாம்.

ஆப்ரஹாம் அயெல்ட் ஸ்டூடியோ நிறுவனத்தின் தலைவர். இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன்-அட்வென்ச்சர் கேம் ஆக இருக்கும்.

son of thanjai scaled

தஞ்சையின் மகன் யார்?

விண்ணேந்திரன். அவன் தான் இந்த கதையின் நாயகன். இந்த விளையாட்டை துவங்கும் போது, விண்ணேந்திரன் என்ற சோழ இளவரசனாக நீங்கள் விளையாடுகிறீர்கள்.

இந்த இளவரசன் தன் குடும்பம், அரியணை, அடையாளம் என அனைத்தையும் இழந்து, ஒரு காலத்தில் தான் புறக்கணித்த மக்களிடையே வாழ நிர்பந்திக்கப்படுகிறான். படையெடுப்பாலும் பஞ்சத்தாலும் பிளவுபட்ட ஒரு நிலத்தின் வழியே அவன் பயணிக்கும்போது, ​​இந்தப் பயணம் அதிகாரத்தை மீட்டெடுப்பதை விட, அந்தச் செயல்பாட்டில் அவன் யாராக மாறுகிறான் என்பதைப் பற்றியதாகவே அமைகிறது.

இந்த விளையாட்டை விரைவில் வீடியோ கேம் ஆர்வம் கொண்டவர்கள் ஆடும் போது முதலில் விண்ணேந்திரனின் ஆயுதத்தை கண்டு வியப்படைவார்கள். அது ஒரு சுருள்வாள்;  நெகிழ்வான,  நாடா போன்ற கத்தி. இயல்பாக உறையில் இருக்குபோது அது சுருண்டு இருக்கும். அதுவே தாக்கப்பயன்படுத்தும் போது, எதிர்பாராத கோணங்களில் சீறிப்பாயும் ஆயுதமாக மாறும். இது தென்னிந்திய தற்காப்பு கலைகளில் பயன்படுத்தப்பட்ட நிஜமான ஆயுதம். அதே போல இதில் சண்டை முறைகள், தென்னிந்திய தற்காப்பு முறையான களரிப்பயட்டு முறையை அடித்தளமாக கொண்டிருக்கும்.

கிரேக்க, ஆங்கில, ரோமா, ஐரோப்பிய வரலாறு, கற்பனை கதைகளை கதைக்களமாக கொண்ட வீடியோ கேம்களை விளையாடியோருக்கு இது நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை தரும்.