“தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நரேஷ் குப்தா இருந்தபோதிலும், தமிழக அரசு தான் அவருக்கு சம்பளம் வழங்குகிறது என்றாலும், நான் 2006 மே மாதம் பதவியேற்றது முதல் அவர் என்னை மரியாதை நிமித்தமாகக்கூட சந்திக்கவில்லை. ஒரு தேர்தல் அதிகாரியாக முதலமைச்சரை சந்திப்பது கூட நேர்மையானவர் என்ற தனது அடையாளத்தை கெடுத்துவிடும் என்று அவர் கருதினார்,” என்று முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இவரை ஒரு திறமையான அதிகாரி என்று அழைத்திருக்கிறார்.
யார் இந்த நரேஷ் குப்தா?
பார்ப்பதற்கு மகாத்மா காந்தி போல இருந்தாலும், பணியில் அஹிம்சாவாதம் காட்டுவது இவரின் வழக்கமல்ல, அதிரடி காட்டுவதே இவரின் ஸ்டைல்.
நேர்மையான நிர்வாகத்திற்குப் பெயர் பெற்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான் நரேஷ் குப்தா. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை பிறப்பிடமாக கொண்ட இவர்,1973-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார்.
தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாவட்ட கலெக்டராக 1985-86 ஆண்டு காலத்தில் பணியாற்றினார். கலெக்டர் பதவியில் 1 ஆண்டு இருந்தாலும் அந்த காலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பிற்கு வலுசேர்த்தார்.
2002-2005 வரை மாநில திட்டக்குழு செயலராகவும் திறம்பட செயலாற்றியவராக இருந்த நரேஷ் குப்தா, 1998-2000 மற்றும் 2005 -2010 வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்தார். 1999 மற்றும் 2009 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் நிறைய முன்னேற்றங்களை தேர்தல் நடத்தும் விதத்தில் கொண்டுவந்தார்.
தொழில்நுட்பவாதி
தலைமை தேர்தல் அதிகாரியாக தமிழகத்தில் இவர் பணியாற்றிய காலத்தில், வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தார். குறுஞ்செய்தி மூலம் வாக்கு சதவீதத்தை உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை தொடங்கியவர் என்ற பெருமையும், தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் உத்தியை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
அசராத ஆளுமை
எத்தகைய அரசியல் அழுத்தங்கள் வந்தபோதிலும், விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் அவரது குணம் அரசியல் கட்சித் தலைவர்களாலும் பொதுமக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டது. தேர்தல்களை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.
தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றது முதல், அவர் அப்போதைய முதலமைச்சர்கள் ஜெயலலிதாவையோ அல்லது கருணாநிதியையோ நேரில் சந்தித்தது கிடையாது. கருணாநிதி அவரை விமர்சித்தார், ஜெயலலிதா அவரைப் பாராட்டினார்.
நரேஷ் குப்தா ஒரு நேர்மையான அதிகாரியாகப் பரவலாக அறியப்பட்டாலும், அவர் அதிமுகவிற்கு ஆதரவான அதிகாரி என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், 2006 தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய அதிமுக அரசு பிறப்பித்த பல அரசாணைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுத்து நிறுத்தியவர் குப்தா தான்.
விமர்சனங்களை யார் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தேர்தல் விதிகள் எதுவோ அது நிலைநாட்டப்பட உரிய நடவடிக்கை எடுக்க, எந்த அரசு ஆட்சியில் இருந்தபோதும் அவர் தயங்கியது இல்லை.
பிறருக்கு உதாரணம்
37 ஆண்டுகள் சிறப்பாக பணிசெய்து, 2010ல் ஒய்வு பெற்ற நரேஷ் குப்தா ஏப்ரல் 2023ல் இயற்கை எய்தினார் என்றாலும் இன்று வரை நேர்மையான தேர்தல் அதிகாரி என போற்றப்படுகிறார்.
நரேஷ் குப்தா போல் தங்களின் உண்மையான எஜமானர்களான இந்திய குடிமக்களே என உணர்ந்து மக்களுக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் பணிசெய்யும் அதிகாரிகள் கொண்டாடப்படுகிறார்கள்.
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இந்திய ஆட்சிப் பணியில் சேரும்போது தாங்கள் ஏற்ற உறுதிமொழிக்கு உண்மையாக நடக்க வேண்டும் என்பதும், நரேஷ் குப்தாவைப் போலவே போற்றப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காலம் நிச்சயம் அனைவரையும் மதிப்பிடும்.
