கோவை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது :-

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து முழுமையாக விதிமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தனி குழுக்கள் நியமிக்கப்பட்டது.116க்கும் மேற்பட்ட பறக்கும் படை, 90 எஸ்.எஸ்.டி. கண்காணிப்பு குழு அனைத்து சட்டமன்ற தொகுதியில் களத்தில் உள்ளனர்.

கட்டுப்பாடு அறை, சி-விஜில் செயலி என அனைத்து வழிகள் மூலம் வரும் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகளை செய்து உள்ளோம் என கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார் கூறினார்.

அப்போது அவரிடம் கோவை தெற்கு தொகுதியில் ரூ.5000 பணம், முக்குத்தி வழங்கப்படுகிறது என அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு தெரிவித்தாலும் ஆட்சியர் (கலெக்டர்) தரப்பில் நடவடிக்கை இல்லை எனவும், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், தேர்தல் தொடர்பாக வரும் அனைத்து புகார்களை உடனே கேட்டு, அதன் மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் கூடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வரும் புகார்கள் மீது தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் துறை அதிகாரிகள் மூலமாக உடனுக்கு உடன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். புகார்கள் மேல் சி.எஸ்.ஆர்., மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், என கூறினார்.

கோவை மாவட்டத்தில் தங்கியிருந்த வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளியேறினார்களா? அது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றிய கேள்விக்கு, இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, அனைத்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்.ஒ.பி) கோவையில் பின்பற்றி உள்ளோம் எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் துறை அதிகாரிகள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளியேறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு போதிய காவல்துறையினரை, சி.ஆர்.பி.எப். படையினரை நியமித்துள்ளோம் எனக்கூறிய அவர், எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல் கோவையில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்.