கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் (கே.எம்.சி.ஹெச்.) நேற்று ‘அனஸ்தீசியா அப்டேட் 2026 – சுகம்மடெக்ஸ் காலத்தில் நரம்புத்தசை முடக்கம்” என்ற ஒரு மருத்துவ கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பாதுகாப்பின் புதிய முன்னேற்றங்களை அறிய ஆர்வமாக இருந்த மூத்த மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், நவீன மயக்க மருந்து துறையில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றமான நரம்புத்தசை தளர்வின் பரிணாம வளர்ச்சி மற்றும் ‘சுகம்மடெக்ஸ்’ (Sugammadex) மருந்தின் மிகப்பெரிய தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறி வரும் நிலையில், தசை தளர்வு மருந்துகள் (muscle relaxants) தாக்கத்தை விரைவாகவும், கணிக்கக்கூடிய வகையிலும், முழுமையாகவும் மாற்றுவது, நோயாளிகள் விரைவான குணமடைவதற்கும் அவர்கள் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமான ஒன்று.

இந்த அறிவியல் அமர்வுகளில் நரம்பு மற்றும் தசைகள் இணையும் விதம் குறித்தும், தற்போதைய மருந்துகள் செயல்படும் விதம் குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படக்கூடிய தசைச் சோர்வு அல்லது தற்காலிக முடக்கத்தைத் தவிர்க்க, நரம்புத்தசை செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணிப்பது மிக அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியில், மயக்க மருந்தின் விளைவை மாற்றும் மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது. மருந்தின் பலன்கள், அதன் விலை மற்றும் மருத்துவர்களின் அனுபவம் ஆகியவற்றை ஒப்பிட்டு நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். இது பல்வேறு மருத்துவச் சூழல்களில் மருத்துவர்கள் சரியான முடிவுகளை எடுக்க ஒரு வழிகாட்டியாக அமைந்தது

கே.எம்.சி.ஹெச். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், “‘அனஸ்தீசியா அப்டேட் 2026’ போன்ற கல்வி முயற்சிகள் மிகவும் முக்கியமானவை. சுகம்மடெக்ஸ் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை முழுமையாகத் தெரிந்து கொள்வதன் மூலம், நாம் நோயாளிகள் குணமடையும் நேரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் பாதுகாப்பினையும் உறுதிசெய்கிறோம்” என்றார்.

கே.எம்.சி.ஹெச். செயல் இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி கூறுகையில், “துல்லியமான கண்காணிப்பு மற்றும் நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அறுவை சிகிச்சை மருத்துவத்தில் ஒரு புதிய மைல்கல். மருத்துவர்களும் மாணவர்களும் இந்த நவீன முறைகளைக் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் நவீன மருத்துவத்தின் முழு பலனும் கிடைப்பதை நாம் உறுதி செய்யலாம்” என்றார்.

இந்த நிகழ்வை கே.எம்.சி.ஹெச். மயக்கவியல் துறை மிகச் சிறப்பாக நடத்தியது. அறிவார்ந்த ஆழத்துடன் அமைந்திருந்தது என்று பாராட்டப்பட்ட இந்த கருத்தரங்கின் ஏற்பாட்டுக் குழுவில் கேஎம்சிஹெச் மயக்க மருந்து நிபுணர்களான டாக்டர் சுப்பையா செல்லையா (ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்), டாக்டர் மகேஷ்வரன் (இணை ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்), டாக்டர் அருண் பிரசாத், டாக்டர் ஹரேந்திர சிங் ஜாட், டாக்டர் அருண் குமார் மற்றும் டாக்டர் விவேகானந்தன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.