கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவானந்தா காலனி பகுதியில் நேற்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தெற்கு தொகுதி செந்தில் பாலாஜி வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத அடிப்படை வசதிகளை ஐந்தே ஆண்டுகளில் நிறைவேற்றி தந்து, கோவை மாநகராட்சியில் 1700 கிலோமீட்டர் அளவுக்கு சாலைகளை அமைத்து தந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதை அனைவரும் ஒருமுறை நினைத்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கிட்டத்தட்ட ரூ.760 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்க மட்டும் நிதிகளை வழங்கி திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என கூறிய அவர், இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆக அவர் பொறுப்பேற்றதும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000-த்திலிருந்து ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் உள்ள 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் பொறுத்தப்படாத நவீன வசதி கொண்ட பம்ப்செட் வழங்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி வழங்கியதை பற்றி பேசிய அவர், இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்ட பம்ப்செட் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரமும் உயரும் என தெரிவித்தார்.

இது போல தொடர்ச்சியாக பல வாக்குறுதிகளை வழங்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினின்
ஆட்சியின் சாதனைகளை தொடர்ந்து பெற  கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது என்ற சரித்திர சாதனையை உருவாக்கி தாருங்கள் என வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.