ஈ.ஏ.எஸ்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஈக்கோ எவால்வ் கிளப், யங் இந்தியன்ஸ் யுவா அமைப்பு, மதுக்கரை வனச்சரகம் ஆகியவை இணைந்து, நவக்கரை செங்கன்பாலம் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கும் முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நவக்கரை பிரிவு வனவர் ராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, காடுகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். வன விலங்குகள் அழியாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. மனிதன் உயிர் வாழ்வதற்கு காடுகளும், வன விலங்குகளும் துணை புரிகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை போட்டுச் செல்வது வனத்தையும், விலங்குகளையும் பாதிக்கும் என்றார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் வனத்துறையினருடன் இணைந்து சோளக்கரை சுற்று, சின்ன சிசர்வ் ஏ-லைன் பகுதி முதல் மூன்றாவது ஏஐ டவர் வரை, இரு பகுதியிலும் 61 பைகளில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகள் சேகரித்து தூய்மைப்படுத்தினர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் தொடர்ந்து 100 நாட்களுக்கு இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.
