“மத்திய அரசின் உதவியுடன் ரூ.10,000 கோடிக்கு மேல் கோவை மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம். அதனால் இன்றும் நெஞ்சை நிமித்தி கொண்டு வாக்கு கேட்கமுடியும் அ.தி.மு.க.வினரால்,” என அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராமன் கூறினார்.
இன்று காலை கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அருகில் தனது தேர்தல் பரப்புரையை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அவர் துவக்கினார்.
அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற்ற சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இருந்தபோது, தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியை தொகுதியின் நலனுக்காக ஒதுக்கியும் கிழக்கு மண்டலம் மற்றும் சில குறிப்பிட்ட வார்டுகளில் பணிகள் நடைபெறாமல் இருந்ததற்கு ஆளும் திமுகவின் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் மற்றும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை காரணமாக குறிப்பிட்டு இவையெல்லாம் சர்வாதிகார போக்கு என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் கோவையில் வீட்டு வரி, மின்சார வரி, குப்பை வரி என மாநகராட்சி வரியை அதிகரித்து வந்தாலும் வளர்ச்சி இல்லாத கோவையை தான் உருவாக்கி இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த 4.5 ஆண்டு காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் ஒத்துழைப்போடு கோவை மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது என்று கூறினார்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை, விளாங்குறிச்சி எல்காட் ஐடி பூங்கா, அவிநாசி மேம்பாலம், சீர்மிகு நகர திட்ட பணிகள், கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்கான முதற்கட்ட பணிகள் என பலவும் செயல்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோவை விமான நிலைய விரிவாகத்திற்கு 80 முதல் 85 % நிலம் கையகப்படுத்தும் பணிகளை மத்திய அரசின் ஒத்துழைப்போடு அதிமுக அரசு செய்து முடித்திருந்தாலும் 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு திமுக அரசு பிற மாநிலங்களில் வழக்கமாக பின்பற்றும் நடைமுறையை செயல்படுத்தாமல் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க காலம் தாழ்த்தி வந்ததை கடுமையாக விமர்சனம் செய்தார் கே.ஆர்.ஜெயராம்.
அதிமுக ஆட்சியிலேயே கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், ஆட்சி மாற்றத்திற்கு பின்பு திமுக அரசு தவறுகள் நிறைந்த திட்ட அறிக்கையை மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்து திட்டம் செயல்படாமல் போக காரணமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
தி.மு.க.வை தீய சக்தி என்று குறிப்பிட்ட அவர் அதை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்துள்ளது எனவும், இந்த தேர்தலில் கோவை மட்டுமல்ல தமிழக முழுவதிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் எனவும் அந்த ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டமும் கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
