இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் தூக்கத்திற்கான போதிய முக்கியத்துவத்தை அளிக்காமல் உள்ளனர். தற்போது தினமும் 5 முதல் 6 மணி நேரம் மட்டுமே தூங்குவது பலருக்கும் வழக்கமாகி விட்டது. ஆனால், நீண்ட காலம் இந்த பழக்கம் தொடரும் போது, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது காலப்போக்கில் சர்க்கரை நோய், இதய நோய் அபாயங்களை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, சர்க்கரை நோய் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தூக்கமின்மைக்கும் சர்க்கரை நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என நினைக்கலாம். ஆனால் இவற்றிற்கு இடையே மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது, உடலின் ரத்த சர்க்கரையை சீராக கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கிறது.

குறிப்பாக, இன்சுலின் ஹார்மோனுக்கு உடலின் செல்கள் சரியாகப் பதிலளிக்காத நிலை உருவாகிறது. இது டைப் 2 சர்க்கரை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளில் ஒன்றாகும். இது ஒருநாள் தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனை அல்ல. தூக்கமின்மை தொடர்ந்து நீடிப்பதன் விளைவாக இது உருவாகிறது.

அதிக உடல் எடை கொண்டவர்கள், ஹை பிபி உள்ளவர்கள்,40 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த சர்க்கரை அளவு பார்டர் லைனில் இருப்பவர்கள் தூக்க விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவதால், உடல்நிலை மேலும் மோசமாகும்.

ஒருவர் தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதய ஆரோக்கியம் மேம்படும். மூளையின் செயல்பாடு நன்றாக இருக்கும்.

தூக்கமின்மையின் பாதிப்பு உடலில் உடனடியாக தெரியாது. ஆனால், மெதுவாக உடலை பாதித்து, சில ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை நோய், இதய நோய், நீண்டநாள் சோர்வு போன்ற பாதிப்புகளாக வெளிப்படும். தினமும் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் நன்றாக உறங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.