குடியரசு தினம் வரவுள்ளது என்றாலும் சரி, சுதந்திர தினம் வரவுள்ளது என்றாலும் சரி, கோவையில் மூவர்ண கொடி தயாரிப்பில் விறுவிறுப்புடன் ஈடுபடும் இந்த ஒரு பணியாளரை கண்டிப்பாக பல முன்னணி நாளிதழ்களில், செய்திக்கான சமூக வலைத்தளபக்கங்களில் பார்க்கமுடியும்.
இவரின் பெயர் ராஜேந்திரன், கொடி தயாரிப்பு பணியில் சுமார் அரை நூற்றாண்டு கால பயணத்திற்கு சொந்தக்காரர். கோயம்புத்தூர் டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதிக்கு அருகே செயல்பட்டு வரும் பிரபல ‘காந்திஜி கதர் ஸ்டோர்’ நிறுவனத்தில் கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடி தயாரிப்புப் பணியில் முதன்மைத் தொழிலாளியாக ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்.
இருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன், 1970களின் தொடக்கத்தில் ஒரு ஓவியராகவும், உதவியாளராகவும் அச்சுத் துறையில் தடம் பதித்தார். 1980களிலிருந்து ஸ்க்ரீன் பிரின்டிங் முறை மூலமாக தேசியக் கொடிகளையும், அரசியல் கட்சி கொடிகளையும் பெருமளவில் தயாரிக்கும் முறையை தனது நிறுவனத்தின் தலைவர் ஜெயக்குமாரின் வழிகாட்டுதலில் தொடங்கினார்.
ஆரம்ப காலத்தில் பள்ளி விழாக்களுக்கு கையினால் கொடிகளை வரைந்து கொடுத்து வந்த ராஜேந்திரன், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களுக்கு அப்போதைய பஞ்சாயத்துகள், பள்ளிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றங்களின் தேவையை உணர்ந்து திரையச்சு முறையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு தனது முதலாளியிடம் ஆலோசித்தார். அதன் படி அப்பணிகள் நடைபெற்றது.
1980களில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க கொடிகள் பட்டிதொட்டியெங்கும் தேவைப்பட்டபோது அதற்கு தேவையானவற்றை ‘காந்திஜி கதர் ஸ்டோர்’ செய்தது. அதன்பின்னர், எம்.பி. சுப்பராயன் மூலமாகப் பெறப்பட்ட சி.பி.ஐ கதிரருவாள் கொடி ஆர்டர்கள், காங்கிரஸ் கட்சி கொடிகள் எனத் தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் அந்தந்த அரசியல் கட்சி கொடிகளை சப்ளை செய்தார்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், எம்.ஜி.ஆர்.காலம் முதல் ஜோசப் விஜய் காலம் வரை உருவாகி வரும் அனைத்துப் புதிய கட்சிகளுக்கும் தேவைப்படும் கொடிகளை இவர் பணிபுரியும் நிறுவனமும், இவரின் கைவண்ணமும் தொடர்ந்து வழங்கிகொண்டுவருகிறது.
சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமன்றி, கோவில் கும்பாபிஷேகங்கள், காாதணி மற்றும் திருமண விழாக்கள், அரசியல் மாநாடுகள், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என ஆண்டு முழுவதும் இத்தொழில் தொடர்ந்து நடைபெறுகிறது.
திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற இடங்களில் இவர்களின் கிளைப் பட்டறைகள் செயல்படுகின்றன. திருப்பூரில் உள்ள பெரிய பட்டறையில் 30 முதல் 40 தொழிலாளர்கள் ஒரே நாளில் 5,000 முதல் 10,000 கொடிகள் வரை அச்சடிக்கும் வசதி உள்ளது. மேலும், மூவர்ணத் துணிகளைத் தைத்து இணைக்கும் பணியின் மூலம் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல பெண்களுக்கு தொடர் வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.
இவர்கள் 8×10 அங்குல சிறிய கொடிகள் மற்றும் பேட்ஜ்கள் முதல், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் பயன்படும் 15 முதல் 30 அடி உயரப் பிரம்மாண்டக் கொடிகள் வரை பல அளவுகளில் தயாரிக்கின்றனர். கதர், சூப்பர் காட்டன், வெல்வெட் துணிகள் மற்றும் காகிதங்களை மட்டுமே பயன்படுத்தி கொடிகளையும் தோரணங்களையும் சூழலுக்கு உகந்த முறையில் தயாரிக்கின்றனர்.

2022ம் ஆண்டு பாரதப் பிரதமரின் ‘வீடு தோறும் தேசியக் கொடி’ அழைப்புக்குப் பின் பொதுமக்களிடையே தேசியக் கொடி வாங்கும் ஆர்வம் கணிசமாக அதிகரித்துள்ளது என கூறுகிறார் ராஜேந்திரன். 65 வயதைக் கடந்த நிலையிலும், மன உறுதியோடு பணியாற்றும் இவர், அடுத்த 2 ஆண்டுகளில் கொடிதயாரிப்பில் அரை சதம் அடிக்கப்போகிறார்.
வெளியே செல்லும்போது எங்கேயாவது தேசியக் கொடி தவறாகக் கட்டப்பட்டிருந்தாலோ அல்லது தலைகீழாகப் பறந்தாலோ, பேருந்தில் சென்றால் கூட இறங்கி சென்று அதை சரிசெய்ய அறிவுறுத்தும் அளவுக்குத் தீவிரமான தேசப்பற்றோடு வாழ்ந்து வருகிறார் இந்த கோவைக்காரர்.

