குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்திற்குள் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகள் குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.
கோழிக்கோடு விமான விபத்து
2020 ஆகஸ்ட் 7 துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு புறப்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையைத் தாண்டி கீழே விழுந்தது. விமானத்தில் 190 பேர் இருந்த நிலையில், 21 பேர் உயிரிழந்தனர்.
மங்களூர் விமான விபத்து
2010 மே 22 ஏர் இந்தியா விமானம் 166 பேருடன் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. மங்களூர் விமான நிலையத்தில் தரையைத் தொட்ட பிறகு, குறிப்பிட்ட தூரத்திற்குள் நிற்காமல், தலைகுப்புற கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர்.
பாட்னா விமான விபத்து
2000 ஜூலை 17 கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் ஏர் விமானத்தில் 58 பேர் பயணம் செய்தனர். பாட்னாவில் தரையிறங்கும்போது விபத்தானது. தரையில் இருந்தவர்கள் உள்பட மொத்தமாக 60 பேர் உயிரிழந்தனர்.
டில்லி விமான மோதல்
1996 நவம்பர் 12 நடந்த விமான விபத்து, இந்திய விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்து ஆகும். இதில் சவுதி அரேபியாவின் போயிங் விமானமும், கஜகஸ்தானின் விமானமும் டெல்லி அருகே மோதின. இரு விமானங்களில் இருந்த 349 பேர் மரணமடைந்தனர். விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த கட்டளைகளை, கஜகஸ்தான் விமானத்தில் இருந்தவர்கள் சரியாக புரிந்துகொள்ளாததே விபத்திற்குக் காரணம் என விசாரணையில் தெரிந்தது.
பெங்களூர் விமான விபத்து
1990 பிப்ரவரி 14 மும்பையிலிருந்து பெங்களூரு வந்த இந்தியன் ஏர்லைன்சின் விமானம் விபத்தானது. குறிப்பிட்ட உயரத்தைவிட கீழே பறந்ததால், விமானத்தின் சக்கரங்கள் தரையைத் தொட்டன. இதனால் விமானம் குலுங்கி தரையில் மோதி நொறுங்கியது. இதில் 92 பேர் பலியாகினர். விமானியின் தவறே விபத்திற்குக் காரணம் என விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஆமதாபாத் விமான விபத்து
1988 அக்டோபர் 19 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆமதாபாத் விமான நிலையத்தை நெருங்கும்போது விபத்தானது. பனி மூட்டமாக இருந்ததால், போதுமான அளவுக்கு ஓடுபாதை தெரியாமல் இருந்தது. ஓடுபாதை தெரியாவிட்டால் 500 அடி உயரத்திற்குக் கீழே விமானம் இறங்கக்கூடாது. இரு விமானிகளுமே ஓடுபாதையைப் பார்க்கும் மும்முரத்தில் விமானம் உயரம் இழப்பதை கவனிக்கவில்லை. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர்.
மும்பை விமான விபத்து
1978 ஜனவரி 1 மும்பையிலிருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் விழுந்து நொறுங்கியதில் 213 பேர் உயிரிழந்தனர். ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு 101 விநாடிகளே ஆன நிலையில், அரபிக் கடலில் விழுந்தது.
டெல்லி வமான விபத்து
1973 மே 31 டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தை நெருங்கியபோது, புழுதிப் புயல் வீசத் துவங்கியது. விமானம் உயரழுத்த மின்சாரக் கம்பியின் மீது மோதி விபத்தானது.
மகாராஷ்டிரா விமான விபத்து
1962 ஜூலை 7 மகாராஷ்டிராவின் ஜுன்னர் பகுதியில் இத்தாலிய விமான நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானது. மும்பை விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானம் பாதுகாப்பான உயரத்தைவிட மிகக் குறைந்த உயரத்தில் பறக்கத் துவங்கியது. அடுத்த நிமிடம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டடு, தேவந்தயாச்சி மலையில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 94 பேர் உயிரிழந்தனர்.