திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள உலக சமாதான அறக்கட்டளையின் சார்பில், உலகம் அமைதி பெற வேண்டி ஓவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதி உலக சமாதான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1918 ம் ஆண்டு நவம்பர் 11 முதல் உலகப் போர் முடிவு நாள். காலை 11 மணிக்கு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் போர் நிறுத்த நாள் / நினைவு நாள் எனக் கொண்டாடப்படுகிறது. போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த நாளில் உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதாவது காலை 11:11 அல்லது இரவு 11:11 மணிக்கு சிறிய தியானம் செய்வது சிறந்தது. மனதில் அமைதி, அன்பு, உலக ஒற்றுமை ஆகியவற்றை பிரார்த்திக்கலாம். இதனால் உள்ளுணர்வு தெளிவு மற்றும் மன ஒளி அதிகரிக்கும்.

11.11 என்பது அனைத்தும் ஒரே ஒளியில் இணையும் நாள். இந்த நாள் ஒவ்வொருவருக்கும் சுய விழிப்புணர்வை ஏற்படுத்தும். அமைதி, சமத்துவம் மற்றும் அன்பு ஆகிய மூன்றும் மனித வாழ்வின் அடித்தளங்கள் என்பதை நினைவூட்டும் நாள் இது.

உலக அமைதிக்காக தினமும் காலை 11:11 மணிக்கு ஒரு நிமிட அமைதி காப்போம். இருக்கையில் அமர்ந்துகொண்டு, கரங்களைக் கோர்த்து, கண்களை லேசாக மூடிக்கொள்ளவும். 3 எண்ணிக்கை மூச்சை உள்ளிழுக்கவும், 3 எண்ணிக்கை மூச்சை உள் நிறுத்தவும், 3 எண்ணிக்கை மூச்சை வெளிவிடவும், பிறகு 3 எண்ணிக்கை மூச்சு இல்லாமல் அமைதியாக இருக்கவும். இந்த ஒரு சுற்றுக்கு மொத்தம் 12 வினாடிகள். இதுபோல் 5 சுற்றுக்கள் செய்யும் போது 60 வினாடிகள் (1 நிமிடம்) ஆகிறது. தனி மனித அமைதி மூலம் உலக அமைதியைக் காப்போம்.