தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு, பல்வேறு துறைகளில் வேகமாகப் பயன்பாட்டுக்கு வருகிறது. தகவல் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, மருத்துவம், வங்கி உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே பல பணிகளை ஏ.ஐ., கருவிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால், எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், ‘இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலைவாய்ப்புகளை மறுவடிவமைக்கிறது’ என்ற தலைப்பில் ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

முழு வேலையும் பறிபோகாது!

ஒரு பணியாளரின் வேலை என்பது ஒரே ஒரு செயல்பாட்டை மட்டும் கொண்டதல்ல. பல்வேறு சிறிய பணிகள் இணைந்தே ஒரு வேலை உருவாகிறது. அவற்றில் சிலவற்றை மட்டுமே செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ள முடியும். ஒரு தொழிலில் உள்ள அனைத்து பணிகளையும் ஏ.ஐ., முழுமையாகக் கையகப்படுத்திவிடும் என்று கூற முடியாது என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, சென்னை போன்ற நகரங்களில் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையங்களில், கடவுச்சொல்லை மீட்டமைத்தல், வங்கிக் கணக்கு இருப்பைத் தெரிவித்தல், மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பதிவு செய்தல் போன்ற வழக்கமான பணிகளைத் தானியங்கி குரல் உதவியாளர்கள் மேற்கொள்ளலாம்.

ஆனால், சிக்கலான புகார்களை விசாரித்தல், எதிர்பாராத பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், கோபத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைச் சமாளித்தல் போன்ற பணிகளுக்கு மனிதர்களின் அனுபவமும் முடிவெடுக்கும் திறனும் தொடர்ந்து தேவைப்படும்.

இரண்டு வகையாக மாறும் வேலைகள்

செயற்கை நுண்ணறிவின் வருகையால் வேலைகளில் ஏற்படும் மாற்றங்களை இரண்டு வகையாகப் புரிந்துகொள்ளலாம்.

முதல் வகையில், ஒரு வேலையின் பெரும்பாலான வழக்கமான செயல்பாடுகளை ஏ.ஐ., மேற்கொள்ளும். அதன் முடிவுகளைச் சரிபார்ப்பது, தவறுகளைத் திருத்துவது, விதிவிலக்கான சூழல்களைக் கையாள்வது போன்ற பொறுப்புகளை மனிதர்கள் ஏற்றுக்கொள்வர்.

இரண்டாவது வகையில், முக்கியப் பணிகளை மனிதர்களே தொடர்ந்து மேற்கொள்வர். அவர்களின் வேலையை விரைவாகவும் திறமையாகவும் முடிக்க உதவும் கருவியாக மட்டுமே ஏ.ஐ., செயல்படும்.

இளநிலை ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு?

பொதுவாக, பணியில் புதிதாகச் சேரும் ஊழியர்கள் தரவுகளைச் சரிபார்த்தல், அறிக்கைகள் தயாரித்தல், வாடிக்கையாளர்களின் வழக்கமான கேள்விகளுக்குப் பதிலளித்தல் போன்ற எளிய பணிகளில் ஈடுபடுவர். இவற்றின் மூலமாகவே நிறுவனத்தின் செயல்பாடுகளை படிப்படியாகக் கற்றுக்கொள்கின்றனர்.

காலப்போக்கில் கிடைக்கும் இந்த அனுபவமே அவர்களை உயர் பொறுப்புகளுக்குத் தயார்படுத்துகிறது. ஆனால், இத்தகைய ஆரம்பநிலைப் பணிகளை ஏ.ஐ., கருவிகள் மேற்கொள்ளத் தொடங்கினால், இளநிலை ஊழியர்களுக்குப் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறையலாம்.

மறுபயிற்சியும் புதிய திறன்களும் அவசியம்

செயற்கை நுண்ணறிவின் பலன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்றால், அதன் பயன்பாடு பெரிய நிறுவனங்களுடன் நின்றுவிடக் கூடாது என ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

குறிப்பாக, சிறு மற்றும் குறு வணிகங்களும் குறைந்த செலவில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்நுட்ப மாற்றத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணிகளில் சேருவதற்குத் தேவையான திறன்களை வழங்க வேண்டும்.

ஏ.ஐ., தொழில்நுட்பம், வேலை செய்யும் முறையை எவ்வாறு மாற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வதே முக்கியம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டியது பணியாளர்களின் அவசியமாகிறது. அதே நேரத்தில், ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் நிறுவனங்களின் பொறுப்பாகும்.