தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 5 ஆண்டு காலப் படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 3 ஆண்டு சட்டப் படிப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை அரசு இன்னும் சேகரிக்கவில்லை என்றும், அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது “நாங்களும் அதே பாடத் திட்டத்தைத் தான் பயில்கிறோம். மடிக்கணினி கோரி உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை முறையான பதில் அளிக்கப்படவில்லை. அரசு எங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவது வேதனையளிக்கிறது,” எனத் தெரிவித்தனர்.

சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று காலை கல்லூரி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.