கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய திட்டமான அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் தற்போது 93 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளன. மேம்பாலப் பணிகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
கோவை மாநகரில் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக அவிநாசி சாலை உள்ளது. தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள், மற்றும் திருப்பூர், ஈரோடு போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்தச் சாலையைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், உப்பிலிபாளையம் சிக்னலிலிருந்து கோல்ட்வின்ஸ் வரை 10.1 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 93% பணிகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பாலப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கோல்ட்வின்ஸ் – உப்பிலிபாளையம் மேம்பாலப் பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. மேம்பாலத்தின் கீழ் 1.5 மீட்டர் நடைபாதையுடன் கூடிய டிரைன் அமைக்கும் பணிகளும் நடைபெற்ற வருகிறது. இந்த 10.1 கி.மீ நீளமுள்ள மேம்பாலத் திட்டப் பணிகள் ஜூலை 30ம் தேதிக்குள் முடிவடையும் எனக் கூறினார்.
இந்த மேம்பாலம் திறக்கப்படும்போது, போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும். பயண நேரத்தையும் குறைத்து, பொதுமக்களுக்குப் பயனளிக்கும்.