சமையலறையில் எப்போதும் மணம் வீசும் மசாலாக்களில் முன்னணியில் இருப்பது ஏலக்காய் தான். இனிப்பு வகைகள் முதல் குழம்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற பானங்கள் வரை சிறிதளவு ஏலக்காய் சேர்க்கிறோம். சுவையும் நறுமணமும் மட்டுமல்ல; இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளும் தருகிறது.

குறிப்பாக, தினசரி குடிக்கும் டீ.,யில் ஏலக்காயைச் சேர்த்தால், அதன் சுவை மட்டுமின்றி உடம்புக்கும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

முதலாவதாக, ஏலக்காய் டீயின் ருசியை இன்னும் சுவையாக மாற்றும். சாதாரண பிளாக் டீயின் கடுமையான சுவையையும் இது சமநிலைப்படுத்தும். இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மசாலாக்களோடு கலந்து வந்தால், ஏலக்காயின் மென்மையான நறுமணம் டீயை சுவையான பானமாக மாற்றிடும்.

செரிமானத்தை சீர்படுத்தும் திறன் ஏலக்காயின் முக்கிய குணம். டீயில் இதை சேர்த்து குடித்தால், செரிமான நொதிகள் செயல்பாட்டை மேம்படுத்தி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்கும். உணவுக்குப் பிறகு ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால் வயிற்றில் ஏற்படும் கனத்த உணர்வு குறையும்.

அதுமட்டுமில்லாமல், ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் விரைவில் எரிந்து எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இயற்கையான டையூரிடிக் ஆக இருப்பதால், உடலில் சேரும் அதிக நீரை வெளியேற்றி வீக்கம், சோர்வு போன்றவற்றை குறைக்கும்.

கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகளையும் மேம்படுத்தும். இதை டீயாக குடிப்பது நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். இதனால் சருமம் தெளிவாகவும், உடல் லேசாகவும் இருக்கும்.

ஏலக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் நோயெதிர்ப்பு சக்தியை உயர்த்தும். ஃப்ரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்தி, நீண்டகால நோய்களைத் தடுக்க உதவும்.

ஏலக்காய் டீ மனநிலையை தளர்த்தும். நம் மூளையில் ‘நல்ல உணர்வு’ ஹார்மோன்களான செரோடோனின் உற்பத்தியை தூண்டி மன அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும்.

சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து. இதன் இயற்கை சளி நீக்கி தன்மை தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்றவற்றை குறைக்கும். தொண்டை புண்கள் ஆற்ற உதவும். குளிர் காலங்களில் ஏலக்காய் டீ குடிப்பது ஒரு சிறந்த பரிந்துரை தான்.

வாய்வழி சுகாதாரத்திலும் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. டீயில் இதை சேர்த்து குடிப்பதால் வாய்வாசனை நீங்கி, பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்க முடியும்.

ஏலக்காய் நல்லது என்றாலும், சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ஒவ்வாமை, நீரிழிவு பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும்.