குமரகுரு கல்லூரி மாணவர்கள் ஹைட்ரஜன் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் உருவாக்கிய வாகனத்தை கத்தார் நாட்டில் நடைபெறும் ஷெல் சுற்றுச்சூழல் மாரத்தான் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து கல்லூரி மாணவர் பிரதிஷ் கூறும் போது :- ஷெல் எக்கோ மாரத்தான் நிகழ்வுக்கு எடுத்துச் செல்வதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாக இருக்க ஒரு வாகனத்தை வடிவமைத்து உள்ளோம். இதனை, ஹைட்ரஜன் ப்யூயல் செல் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளோம், பயன்படுத்தும் போது இது எந்த விதமான மாசும் ஏற்படுத்தாது. இன்றைய வாழ்க்கையில் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து, காற்று மாசு ஏற்படுத்தாதவாறு வாகனங்களில் அதை எவ்வாறு கொண்டு வருவது எனக் கண்டுபிடித்து வாகனத்தை வடிவமைத்து உள்ளோம்.
பெட்ரோல் வாகனங்களை எடுத்துக் கொள்ளும் போது ஒரு கிலோமீட்டருக்கு நான்கு ரூபாய் செலவாகும், எலக்ட்ரிக் வாகனங்களை எடுத்துக் கொண்டால் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவாகும், இந்த ஹைட்ரஜன் வாகனம் ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே எடுத்துக் கொள்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய மாணவி ஹரிணி, ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டால் எந்தவித சுற்றுச்சூழல் தீங்கும் இல்லை. பெட்ரோல் டீசல் எரிபொருளின் விலையைக் காட்டிலும் ஹைட்ரஜனின் எரிபொருள்கள் குறைவாக இருக்கும். ஹைட்ரஜன் எரிபொருளை நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சிகள் சென்று கொண்டு இருக்கிறது. பொதுமக்கள் பயன்படுத்த தற்பொழுது ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வாகனத்தை உருவாக்கி உள்ளோம். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு அனைவரும் பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் உருவாக்க வேண்டும்.
ஹைட்ரஜன் கொண்டு குறைந்த செலவில் சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் உருவாக்கிய வாகனத்தை இந்திய அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் அனைத்து மக்களும் பயனடைவதுடன் சுற்றுச்சூழலும் பேணி காக்கப்படும் எனத் தெரிவித்தார்.