சிங்காநல்லூரில் சரித்திர வெற்றியை பதிவு செய்ய வேண்டும் – கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம்
கோவை சிங்காநல்லூர் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் கே.ஆர் ஜெயராம், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் ஒழிய வேண்டும், கஞ்சா ஒழிய வேண்டும், பாலியல் தொல்லைகள் ஒழிய வேண்டும். டபுள் இன்ஜின் சர்க்காரை உருவாக்குவதற்காக ஆந்திரா முதல்வர் கூட தமிழகத்திற்கு வந்து தமிழகத்தில் திமுக ஒழிய வேண்டும் என்று கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார்.
மத்திய அரசுடன் ஆந்திர அரசு இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. நாமும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் அனைத்து திட்டங்களையும் கேட்டு பெற முடியும். ஒரு குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும். சாதாரண மனிதரும் ஜனாதிபதியாக வேண்டுமென்றால் அது பாஜகவால் தான் முடியும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஐந்தாண்டு காலம் நமக்கு ஏற்பட்ட பிரச்சனையை ஒரு நிமிடம் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலே போதும். ஐந்து ஆண்டு காலத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். திமுகவை பொறுத்தவரை தைரியமாக சொன்னதை செய்யாமல் மீண்டும் வாக்கு சேகரிக்க வந்துள்ளார்கள்.
தமிழகத்தில் முதல் பிரச்சனை முதல்வர் ஸ்டாலின். அடுத்த பிரச்சனை அவரது குடும்பம். மூன்றாவது பிரச்சனை அவருக்கு கீழ் உள்ள காவல்துறை. முதல்வராக ஒருவரை தேர்ந்தெடுத்து அமர வைக்கும் போது அடிப்படை விஷயங்கள் சிலவற்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பல்வேறு விஷயங்களில் முதலமைச்சர் தவறி இருக்கிறார்.
கோவையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி போன்ற பல்வேறு விமான நிலையங்களை கட்டி திறந்து வைத்து விட்டோம். ஆனால், கோவையை பொறுத்தவரை தற்பொழுது வரை ஐந்து ஏக்கர் நிலத்தை கூட கொடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் கோவையின் வளர்ச்சி தடைபட்டு இருக்கிறது.

இந்தியாவிலேயே பொருளாதாரத்தின் முதன்மையான மாவட்டம் கோவை. தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு வேலை வாய்ப்புகளை இங்கே கொண்டு வர வேண்டும். அடுத்த ஐந்தாண்டு காலம் நமக்கான ஒரு வாய்ப்பு. அடுத்த ஐந்தாண்டு காலத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் திட்டங்களை தருவதற்கு மோடி இருக்கிறார். செயல்படுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். சிங்காநல்லூரில் சரித்திர வெற்றியை பதிவு செய்ய வேண்டும். சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் மட்டும்தான் இருக்கிறார். எதிர் வேட்பாளர்கள் யாரும் இல்லை.
20-20 கிரிக்கெட் போட்டியில் கூட 18 ஓவர்கள் ஆடினாலும் கடைசி இரண்டு ஓவர்கள் தான் முக்கியம். அதுதான் வெற்றியையும் தீர்மானிக்கும். எனவே தேர்தலுக்கு இரண்டு நாட்கள் தான் உள்ளது அனைவரும் சேர்ந்து பணியாற்றி வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
