கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.

கோவை மாநகரில் 730, மாவட்டப் பகுதிகளில் 1,500 என மொத்தம் 2,230 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகரில் முதல்கட்டமாக 267 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளக்கிணறு உள்ளிட்ட 5 குளங்களில் இன்று கரைக்கப்படுகின்றன. விநாயகா் சிலை ஊா்வலத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி சாலை, உக்கடம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இன்று தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முத்தண்ணன் குளத்தில் வரும் 18ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விசர்ஜனத்தை முன்னிட்டு, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோவை மாநகருக்குள் லாரிகள் உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்கள் நுழையவும், இயக்கப்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்கடம் வழியாக பேரூர் செல்லும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள், உக்கடம் காவல் நிலைய ரவுண்டானா, பேரூர் புறவழிச்சாலை, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்வபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பை அடைந்து, அங்கிருந்து சிவாலய சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக திருச்சி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் சுங்கம் புறவழிச்சாலை வழியாகச் சென்று திருச்சி சாலையை அடைய வேண்டும். மேட்டுப்பாளையம் மற்றும் தடாகம் பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் ஒப்பணக்கார வீதி, லங்கா கார்னர், ஃபைவ் கார்னர், பி.பி. வீதி, ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்லலாம்.

தடாகம், மேட்டுப்பாளையம், மருதமலை வழித்தடங்களிலும் மாற்றம்

தடாகம் சாலையில் இருந்து மாநகருக்குள் வரும் வாகனங்கள் ஜி.சி.டி. கல்லூரி சந்திப்பில் திரும்பி பாரதி பார்க் சாலை, அவினாசிலிங்கம் கல்லூரி வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் சங்கனூர் பாலம், கண்ணப்ப நகர் சோதனைச்சாவடி, கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து மாநகருக்குள் வரும் வாகனங்கள் செல்வபுரம் பள்ளி சந்திப்பு, அசோக் நகர் ரவுண்டானா, பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் காவல் நிலைய ரவுண்டானாவை அடைய வேண்டும்.

மருதமலையில் இருந்து வரும் வாகனங்கள் லாலி சாலை ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி தடாகம் சாலை, ஜி.சி.டி. கல்லூரி வழியாகவும், அல்லது கௌலி பிரவுன் சாலை வழியாகவும் மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.

காந்திபுரத்திலிருந்து மருதமலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் சிவானந்தா காலனி, ஏ.ஆர்.சி. சந்திப்பு, அழகேசன் சாலை, தடாகம் சாலை, ஜி.சி.டி. கல்லூரி, லாலி சாலை ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும். மேலும், அவிநாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து சுக்கிரவார்பேட்டை, காந்திபார்க் மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் கூட்ஸ் ஷெட் சாலை, மரக்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.ஹெச். சாலை, ஃபைவ் காா்னர், டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்லலாம்.

ஊர்வலப் பாதைகளில் வாகன நிறுத்தத்துக்கு தடை

வெள்ளிக்கிழமை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி, பெரியகடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார்பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெப்பக்குளம் மைதானம், பூ மார்க்கெட் சாலை, பால் மார்க்கெட் சாலை, மெக்ரிக்கர் சாலை, டி.பி. சாலை, லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் சாலை, வெங்கடகிருஷ்ணா சாலை, மேற்கு ஆரோக்கியசாமி சாலை, தடாகம் சாலை, பூசாரிபாளையம் சாலை ஆகிய பகுதிகளிலும் வாகன நிறுத்தத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஊர்வலப் பாதைகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் ஒத்துழைக்குமாறு மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.