சென்னை, அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் 4வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பொருளாளர் ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி தலைமை வகித்தார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி காணொலி வாயிலாக பேசினார். மாணவ, மாணவியருக்குப் பட்டங்களும், சிறப்பிடம் வகித்தவர்களுக்குப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலர் நாராயணன் பங்கேற்று பேசியதாவது: நாளைய பாரதம் புதிய யோசனைகள், திறன்கள், உறுதியான மனப்பான்மையால் மட்டுமே வடிவமைக்கப்படும். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இளம் பொறியாளர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தங்களது தொழில்நுட்பத் திறன், புதுமையான கண்டுபிடிப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஏஐ குறித்து ஜோஹோ தலைமை தகவல் அதிகாரி சரவணன் முத்தையன் பேசுகையில்: ஏஐ தொழில்நுட்பம் மனித ஆற்றலுக்கு மாற்றாக அமையாது. மனிதனின் திறனை மேம்படுத்தும் துணைக் கருவியாகவே இருக்கும். வழக்கமான இயந்திரப் பணிகளை ஏஐ கவனித்துக் கொள்ளும்.

ஆனால் அதற்கான வழிகாட்டுதல், நெறிமுறைகள், மனிதநேயத்தை நீங்கள்தான் தர வேண்டும். புதிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்று, அவற்றை பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்றார்.

சங்கர் சீலிங் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசங்கர் உன்னிதன் பேசுகையில்: தொழில்நுட்பத் திறனுடன் உயர்ந்த நற்பண்புகளையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் உலகையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. ஆனால், அந்த மாற்றம் நன்மையானதா என்பதை மனித விழுமியங்களே தீர்மானிக்கின்றன என்று குறிப்பிட்டார்.