திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தூத்துக்குடி CFS சங்கம், தூத்துக்குடி சரக்கு முனையக சங்கம், திருப்பூர் ஏற்றுமதி போக்குவரத்து சங்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து சங்கம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஏற்றுமதிக்காக தூத்துக்குடிக்கு அனுப்பப்படும் ஆயத்த ஆடை சரக்குகளை, சரக்கு முனையகங்களில் இறக்குவதில் திருப்பூரிலிருந்து செல்லும் போக்குவரத்து வாகனங்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை குறித்து, திருப்பூர் ஏற்றுமதி சரக்குகளை போக்குவரத்து செய்யும் இரு சங்கங்கள் கடந்த மாதம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்திருத்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (4.4.2025) ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதி சரக்குகளை கையாளும் சங்கங்களும், தூத்துக்குடியை சேர்ந்த சரக்கு முனையக சங்க நிர்வாகிகள் மற்றும் ஏற்றுமதி சரக்குகளை சுங்க சோதனை செய்துதரும் சுங்க முகவர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கங்களின் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒவ்வொருவரின் கருத்துகளும் கேட்கப்பட்டது. இறுதியாக திருப்பூர் ஏற்றுமதி சரக்குகளை கையாளும் சங்கங்கள் தங்களின் எதிர்பார்ப்பை எழுத்து பூர்வமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு அளிப்பதென்றும், அதனை தூத்துக்குடி சங்கங்களிடம் அனுப்பி அவர்களின் கருத்துக்களை அறிந்து வரும் ஏப்ரல் 30 தேதிக்குள் சுமுகமான சூழலில் சரக்குகளை கையாள்வது தொடர்வதற்கான நெறிமுறைகளை வகுத்து அனைவரின் ஒப்புதலுடன் இணக்கமாக செயல்படுவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திருக்குமரன், இணைச் செயலாளர் குமார் துரைசாமி, மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனந்த்; தூத்துக்குடி சி.எஃப்.எஸ் சங்கத்தின் தலைவர் செலஸ்டின் வில்லவராயர்; செயலாளர் ராஜ்குமார்; திருப்பூர் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து சங்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதி போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள், தூத்துக்குடி சுங்க தரகர்கள் சங்கம், செயலாளர் ராமசாமி, தூத்துக்குடியின் தக்ஷின் பாரத் கேட்வே டெர்மினல் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் குமார், லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்கள், EssTee ஏற்றுமதி மற்றும் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.