கோவை மாநகரம் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 10.1 கி.மீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

2025 இறுதியில் இது செயல்பாட்டுக்கு வந்தது. அதை தொடர்ந்து 2026 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்டங்கள் பிரிவு சார்பில் சுமார் ரூ.3 கோடி மதிப்பில் மேம்பாலத்தின் மேலே 10.1 கி.மீ வழித்தடம் முழுவதும் கண்காணிப்பில் வைக்க உதவும் 44 செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமராக்கள் மற்றும் 16 எல்.ஈ.டி. திரைகள் நிறுவப்பட்டன.

தலைக்கவசம் அணியாமல் செல்வது, மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்ட 60 கி.மீ. வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவது, ஒரே இரு சக்கர வாகனத்தில் மூவர் செல்வது, காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற விதிமீறல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபட்டால், சம்மந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் பலகையை கொண்டு அடையாளம் கண்டறிந்து உடனே அபராதம் விதிக்கவும் இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

துவக்கத்தில் இந்த கேமராக்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்த போது, மேம்பாலத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனஓட்டிகள் முறையாக வாகனங்களை இயக்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இந்த நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பு சோதனை கட்டத்தில் தான் இருந்துவருகிறது என்பதால் இப்போதைக்கு அங்கு கண்காணிப்புகள் பெரிதளவு நடப்பதில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு விதிமீறல்கள் அதிகரித்துள்ளன.
GD NAIDU scaled
இந்த அமைப்பை நெடுஞ்சாலை துறை சார்பில் மேலாண்மை செய்து வரும் ஒப்பந்ததாரரிடம் இருந்து காவல் துறையிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றாலும் அடுத்த 1 ஆண்டு காலத்திற்கு சோதனை முறை இயக்கத்தில் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை மாநகர காவல்துறை முழுதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சில சவால்களை எதிகொண்டு வருகிறது என்பது தெரியவருகிறது.

மேலும் அடுத்த 1-2 ஆண்டுகளுக்கு இந்த கட்டமைப்பிற்கு தேவையான மின்சாரம் மட்டும் பராமரிப்பிற்கான கட்டணத்தை நெடுஞ்சாலை துறை ஏற்கும். அதன் பின்னர் இதை மாநகராட்சி அல்லது கோவை மாநகர காவல் துறை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.