கோவையின் இரண்டு முக்கிய குடிநீர் ஆதாரங்களான பில்லூர், சிறுவாணி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தென்மேற்கு பருவமழையின் போது கணிசமான மழையைப் பெற்றுள்ளதால், அடுத்த ஆண்டு கோடை வரை குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர் மழை காரணமாக பில்லூர் அணை ஒரு மாதத்திற்குள் 2வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அடுத்த ஆண்டு கோடை வரை குடிநீர் பற்றாக்குறை இருக்காது என கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழையின் போது சிறுவாணி நீர்த்தேக்கம் போதுமான மழையைப் பெறாவிட்டாலும், பில்லூர் நீர் வழங்கல் திட்டங்களை வைத்து சமாளிக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சிறுவாணி அணையில் கசிவு பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலையில், புனேவைச் சேர்ந்த மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தின் குழு, தற்போது நிலவும் நீர் கசிவு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக அணையை ஆய்வு செய்தது. கிரவுட்டிங் முறையைப் பயன்படுத்தி பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் பழுதுபார்ப்புக்கான மதிப்பீட்டு தொகையை கேரள அரசுக்கு வழங்குவார்கள். பின்னர் அவை கோவை மாநகராட்சியிடம் வழங்கப்பட்டு, தேவையான தொகையை செலுத்தியவுடன் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் முடிந்ததும் அணையின் நீர் சேமிப்பு அளவை அதிகரிக்க முடியும்.
