புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஆட்சியர் பவன்குமார், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், மருத்துவர்கள் குகன், கார்திகேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்வில் கோவை ஆட்சியர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய பல தலைப்புகளில் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ தொகுப்பை ஆட்சியர் வெளியிட்டார்.
எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசுகையில்: ஒவ்வொரு ஆண்டும், புகையிலை எதிர்ப்பு தினத்தன்று விழிப்புணர்வு செய்திகளை தனித்துவமான வகையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த ஆராய்ச்சி மையத்தை பாராட்டினார்.
வரும் காலங்களிலேயும் இதேபோல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி சமுதாயத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்களை அவற்றை உடனே நிறுத்த தூண்டும் விழிப்புணர்வு முயற்சி கண்டிப்பாக எடுக்கப்படும் என கூறினார்.
இம்மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் பேசுகையில்: சுமார் 25.3 கோடி பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களில் சுமார் 4.5 கோடி முதல் 5 கோடி பேர் பெண்களாகவும், 20 கோடி பேர் ஆண்களாகவும் உள்ளனர்.
பெண்கள் பெரிதும் புகையிலை மெல்லும் வழக்கத்தை கொண்டவர்களாகவும், குறைவானவர்களே புகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆண்கள் அதிகமானோர் புகைபிடிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
இந்திய ஜனத்தொகையில் 20% முதல் 25% பேர் புகையிலை பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோய்களாக நுரையீரல், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களே உள்ளன. இவை ஏற்பட புகையிலை பயன்பாடே காரணமாக உள்ளது. இதய பாதிப்பு ஏற்பட புகையிலை முக்கிய காரணமாக அமைகிறது என்றார்.