சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் காமராஜ், திருத்தணி ஹரி, கேபி அன்பழகன், ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் அமைச்சரவைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், சில ஊடகங்கள் தொடர்ந்து “அமைச்சர் பதவி கேட்டு பேச்சுவார்த்தை நடந்தது, ஏமாற்றம் ஏற்பட்டது” என செய்தி வெளியிட்டு வருவதாக கூறிய அவர், இதற்கு முன் சி.வி. சண்முகமோ அல்லது நானோ ஒரு முறை கூட அமைச்சர் பதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என்று விளக்கமளித்தார்.

மேலும், தமிழக வெற்றிக்கழகத்தினரும் தாங்கள் எந்த அமைச்சர் பதவியும் கோரவில்லை என செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக வெற்றிக்கழகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திமுக எதிர்ப்பின் அடிப்படையில் அவர்களும், நாங்களும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தோம். அம்மா மற்றும் எம்.ஜி.ஆர். வழியில் செயல்படுகிறோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம்.

அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த எஸ்.பி. வேலுமணி, அதை எப்படி சரிசெய்ய வேண்டும், மீண்டும் கட்சியை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்பதில்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

கட்சிக்குள் பிளவு இல்லை, கருத்து வேறுபாடுகள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிட்டார். இப்போது வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான். சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த போதும், பதவிக்காகவோ பணத்திற்காகவோ ஆதரவு அளிக்கவில்லை என்று தெளிவாக கூறியிருந்தோம்.

முதலமைச்சர் விஜய் அவர்களிடத்தில் அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா மருத்துவ திட்டங்கள் போன்ற மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆரோக்கியமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம்

மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒரு தலைமுறையை தாண்டி இந்தக் கட்சிக்காக உழைத்து வருகிறோம். கட்சியை உடைக்கவோ, பிரிக்கவோ எங்களுக்கு எந்த எண்ணமும் இல்லை. தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து, மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க பாடுபடுவோம் என்று கூறினார்.