கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் துணிக் கழிவுகள் சேகரிப்பு “மறு நெசவு” திட்டம் குறித்த பயிலரங்கம் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை மாநகராட்சி, GIZ இந்தியா மற்றும் GT Bharat இணைந்து செயல்படுத்திய “மறு நெசவு” என்ற வீட்டுத் துணிக்கழிவு மேலாண்மை முன்னோடி திட்டத்தின் முடிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பேசியதாவது: மறு நெசவு திட்டத்தின் மூலம் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட துணிகளை தனியாக சேகரித்து, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கான நிலையான மேலாண்மை முறையை உருவாக்கும் நோக்கத்துடன், கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்படுத்தப்பட்டது.

சுமார் 10 வாரங்கள் நடைபெற்ற இந்த முயற்சியின் மூலம் சுமார் 6,100 கிலோ வீட்டு துணிக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட துணிக்கழிவுகளில் 53 சதவீதம் மறுபயன்பாட்டிற்கும், 44 சதவீதம் நூல் தயாரிப்பு மறுசுழற்சிக்கும், மீதமுள்ள 3 சதவீதம் பிற மீட்பு வழிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான துணிக்கழிவுகள் கலப்பு குப்பைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டு, அவை மதிப்புள்ள வளமாக மாற்றப்பட்டுள்ளது.
முன்பு வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் பொதுவாக நான்கு வகை குப்பைகளுடன் சேர்த்து அகற்றப்பட்டு வந்தன. இதனால் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி இல்லாமல் இருந்தது. தற்போது இந்த “மறு நெசவு” திட்டத்தின் மூலம் மக்கள் வீடுகளிலேயே துணிகளை தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு, துணிக்கழிவுகள் மீட்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த திட்டமானது தொடர்ந்து மாநகராட்சியின் மற்ற வார்டுகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக, துணிக்கழிவுகள் சேகரிப்பு “மறு நெசவு” திட்டம் குறித்து நடைபெற்ற பயிலரங்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர், தூய்மைப் பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
