மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்நிலையில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பியது.
20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2நகரங்களுக்கும் மெட்ரோவுக்கு பதிலாக குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடிய மாற்று போக்குவரத்து தீர்வுகளை ஆராய மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. பேருந்து அடிப்படையிலான வலுவான பொதுப் போக்குவரத்து அமைப்புகள் அல்லது BRTS போன்ற மாடல்கள் கோவை, மதுரைக்கு பொருந்தும் என விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பதிவில் கூறியிருப்பது: ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
