தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதில் கைத்தறி மற்றும் ஜவுளித் துறைக்கு ரூ.1,678 கோடியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ரூ.2,022 கோடியும், தொழில்துறைக்கு ரூ.4,414 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர் துரை பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், ரூ. 2,022 கோடி நிதி ஒதுக்கீட்டில், திருப்பூரில் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

தொழில்நுட்ப ஜவுளி உருமாற்றத் திட்டம், தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் மற்றும் தறி நவீனமயமாக்கல் திட்டம் ஆகிய அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கது.

வெற்றிதிறன் பயிற்சித் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு லட்சம் பேருக்குப் படிப்படியாகத் திறன் பயிற்சி அளிப்பதற்கும், பயிற்சிக் காலத்தில் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கும் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, திறமையான மனிதவளத்திற்கான தொழில்துறையின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும்.

புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு, பெண் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், புதிய தொழிற்கொள்கை அறிவிப்பு, தமிழ்நாடு ஒற்றைச் சாளர 3.0 திட்டத்தின் தொடக்கம் ஆகியவை வரவேற்கத்தக்கது. இந்த முன்னெடுப்புகள், தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்தவும் உதவும்.