வீட்டு உபயோக எல்பிஜி (LPG) விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் வி.சி. அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மக்களுக்கெல்லாம் நான் முதலில் ஒரு நம்பிக்கையூட்டும் தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மாநிலம் முழுவதும் வீட்டு உபயோக எல்பிஜி (LPG) விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் சார்பில், எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன என்றும், விநியோக ஏற்பாடுகள் வலுவாக உள்ளன என்றும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் நிரப்பும் ஆலைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் விநியோக அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம், பொதுமக்கள் தங்களுடைய எல்பிஜி சிலிண்டர்களை வழக்கமான சுழற்சியில் எந்தவித சிரமமும் இன்றி பெற முடிகிறது. எனவே, தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம் என்றும், பீதியுடன் முன்பதிவு செய்வதை தவிர்க்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதனுடன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகமும் முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து முக்கிய முனையங்கள் மற்றும் கிடங்குகளிலும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் வரை விநியோகச் சங்கிலி சீராக இயங்கி வருகிறது. எங்கும் பற்றாக்குறை ஏற்படாதவாறு எண்ணெய் தொழில் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வர்த்தக எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், சுமார் 70 சதவீதம் அளவிற்கு மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள் போன்ற அத்தியாவசிய மற்றும் முன்னுரிமைத் துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதனால் முக்கிய சேவைகள் தடையின்றி தொடர்ந்து இயங்குவதற்கு நாம் ஆதரவளித்து வருகிறோம்.
மேலும், ஏதேனும் அவசர தேவைகள் எழுந்தால், அவற்றையும் உடனடியாக கவனித்து தேவைக்கேற்ப சேவையளிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவை எளிதாக கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து, தொழிலாளர் குடியிருப்புகள் போன்ற இடங்களில் நேரடி விநியோகம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், உண்மையில் தேவையுள்ள எந்த ஒரு குடும்பமும் தவற விடப்படாமல் இருக்க நாம் முயற்சி செய்து வருகிறோம்.
முடிவாக, வீட்டு உபயோக எல்பிஜி விநியோகம் முழுமையாக சீராக நடைபெற்று வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கின்றன. வர்த்தக எல்பிஜி விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் திறம்பட நிர்வகிக்கப்படுகிறது.
மேலும், தேவையுள்ளவர்களுக்கு 5 கிலோ சிலிண்டர்கள் எளிதாக கிடைக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியன் ஆயில் (IOCL) மற்றும் ஒட்டுமொத்த எண்ணெய் துறை (HPCL, BPCL), மக்களுக்கு நம்பகமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் தடையற்ற எரிசக்தி சேவையை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
