செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிவேக வளர்ச்சியை கண்டுவருகிறது. மனிதர்கள் நீண்ட காலமாக செய்து வந்த பல வேலைகளையும் இன்று ஏஐ செய்து முடித்து வருகின்றன. ஒரே மாதிரியான, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகள் படிப்படியாக மனிதர்களிடமிருந்து ஏஐ வசம் மாறி வருகின்றன.

கால் சென்டர், கஸ்டமர் சர்வீஸ், ஹெச்ஆர், கோடிங் போன்ற துறைகளில் ஏஐ தற்போது பெரும்பங்கு வகிக்கிறது. இதனால் வேலை வாய்ப்புகள் குறையும் என்ற பயம் பலரிடமும் உருவாகியுள்ளது. சமீபத்தில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூட, “ஏஐ வளர்ச்சியால் எனது வேலைக்கே ஆபத்து இருக்கலாம்” என நகைச்சுவையுடன் கூறினார். எதிர்காலத்தில் சிஇஓ வேலைகளும் ஏஐயால் மாற்றப்படக்கூடும் என்ற கருத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த சூழலில், ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி உலகளாவிய வேலைவாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இதை சுந்தர் பிச்சை மேலும் ஒரு பேட்டியில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஃபாக்ஸ் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், ஏஐ வளர்ச்சியின் வேகம் தன்னைப் பதற வைக்கிறது; சில நேரங்களில் அதை நினைத்தால் இரவு தூக்கமே வராது என்று அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஏஐ வளர்ச்சிக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. இதில் நன்மைகளும் தீமைகளும் அடங்கும்.  எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் ஏஐ மிகப் பெரிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் மற்றொரு பக்கம், ஏஐ தவறாக பயன்படுத்தப்படும் அபாயமும் மிக அதிகம். குறிப்பாக, உண்மையான நபர்களைப் போல உருவாக்கப்படும் டீப் ஃபேக் போலி வீடியோக்கள் சமூகத்தில் பெரிய குழப்பத்தையும், நம்பிக்கையிழப்பையும் உருவாக்கக்கூடும்.

ஏஐ தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டால் அதன் விளைவுகள் மனிதகுலத்தையே பாதிக்கும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படையாக கூறியிருந்தார். அதேசமயம், மனித சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் ஏஐ வளர வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய விருப்பம் என்றும் அவர் கூறினார்.