விவேகானந்த மேலாண்மை கல்வி நிறுவனம் சார்பில் தென் இந்திய அளவிலான மாணவர் மேலாண்மை போட்டி விம்ஸ்மார்ட் 2கே25 கோயம்புத்தூர் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கம்பிஸ்டா மாணவர் மேலாண்மை சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்வின் தலைமை உரையை வழங்கிய கல்லூரி இயக்குநர் வளர்மதி, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் தொழில்முறை உறவுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். போஷ் பவர் டூல்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் தலைவர் பிரதீப் ராஜாராம் நிகழ்வைத் தொடக்கிவைத்து, மாணவர்கள் பயிற்சி, திட்டப் பணிகள், நெட்வொர்க்கிங் மற்றும் சமூக பொறுப்புகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
ஒரு நாள் நடைபெற்ற இந்த போட்டியில் சிறந்த மேலாளர், சிறந்த மேலாண்மை குழு, பங்கு சந்தை போர், ஐபிஎல் ஏலம், விளம்பர செயல், குழு நடனம், மைம், தீயில்லா சமையல், ரீல்ஸ் உருவாக்கம், முகக்கோலம், புதையல் வேட்டை மற்றும் மேலாண்மை வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் திறனை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், ஸி பஞ்சைரோ ஸ்கூல் அஃப் பாங்கிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பாலா செந்தில், ”உங்கள் செயல்களே மற்றவர்களை ஈர்க்க வேண்டும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வழிகாட்டுதலை வழங்கினார்.
விம்ஸ்மார்ட் 2கே25 நிகழ்வு, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதோடு, தொழில்முறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான மேடை அமைத்ததாகக் கருதப்படுகிறது.