தமிழக்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. இதில் திமுக கூட்டணியில் பெரிய மாற்றம் இருக்காது என தெரிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி விட்டன. தேமுதிக, பாமக, கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது. நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை தனித்தே சந்திக்க உள்ளன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீண்டும் ஆட்சி கட்டிலை பிடிக்க அதிக முனைப்பு காட்டி வருகிறது.  இதற்காக 7 மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணியை திமுக தீவிரப்படுத்தியுள்ளது.  இதில் அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் 234 தொகுதிகளில் 200 வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க கட்சி ரீதியாக 7 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, துணை பொது செயலாளர்கள் ஆ.ராசா,  கனிமொழி ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கே.என்.நேரு.,வுக்கு திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை கவனித்து கொள்ளும் பொறுப்பும்,   எ.வ.வேலு.,க்கு விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களும்,  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை, கரூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களும், அமைச்சர் சக்கரபாணிக்கு ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும்  அதேபோல கனிமொழிக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை கவனித்து கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

குறிப்பிட்ட மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கொங்கு பகுதியில் மீண்டும்  முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

2022ம் ஆண்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மண்டலத்தில் திமுகவிற்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்த செந்தில் பாலாஜி, 2024 மக்களவை தேர்தலிலும் தீவிர களப்பணி மேற்கொண்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலிலும் கொங்கு மண்டலத்தை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.