ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் கோயம்புத்தூர் ஞான சஞ்சீவனம் குருகுலம் ஆகியவை இணைந்து நடத்தும் லிங்கன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனைக்கான மாபெரும் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை, ஸ்கை நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புத்தக வெளியீட்டில் ஒரு சாதனை நிகழ்ச்சியாக, “ஞான அவதாரம்” எனும் பொருண்மையில் முதன்முறையாகப் படைப்புகளை வெளியிடும் 28 எழுத்தாளர்கள் எழுதிய 28 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
இதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனோடு இன்னும் சில முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியிடப்பட்டன. நிகழ்வில் மொத்தமாக 35 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. விருதினைக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் விஸ்வநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் செயலர் கவிதாசன் “எழுத்து தவம்! வாசிப்பு வரம்! என்னும் தலைப்பில் பேசினார்.
கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம், மெய்ஞ்ஞானப் பேச்சாளர் ஸ்ரீ சசிகுமார் நூல்களுக்கான ஏற்புரை வழங்கினார்.
