கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சமூக நீதி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் கோவை அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் நிலையில் நாள்தோறும் இவர்கள் கல்லூரி செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பொழுது கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்துகள் வருவதால் அந்த பேருந்துகளில் ஏறி பயணம் செய்வதற்கு சிரமங்கள் ஏற்படுவதாக தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்யும் பொழுது காலை வேலையில் கல்லூரிக்கு செல்வதற்கு தங்களுக்கென தனி பேருந்து வசதி இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது அவர்களுக்கு காலை நேரத்தில் மட்டும் கவுண்டம்பாளையம் சமூக நீதி விடுதி அருகில் இருந்து அரசு கலைக் கல்லூரி செல்வதற்கான சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார்.

மேலும் பேருந்தில் ஏறி மாணவிகளிடம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிகளும் அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.