இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 7-வது சூரிய சக்தி மின்சார வாகன போட்டி தொடங்கியது. நாடு முழுவதும் இருந்து 750 பேர் உட்பட புதிய கண்டுபிடிப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா மற்றும் கேரளாவிலிருந்து 4 அணிகள், கர்நாடகாவில் இருந்து 5 அணிகள் ஆகியவை தங்களது அதிநவீன சூரிய சக்தி மின்சார வாகனங்களை காட்சிப்படுத்தின. மொத்தம் 26 அணிகள் சோலார் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் கோ-கார்ட் பிரிவுகளில் போட்டியிடுகின்றன. இந்த போட்டிக்கு பல்வேறு தொழில்துறைகளை சேர்ந்த 28 நடுவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியின் செயலாளர் சரசுவதி கண்ணையன் பேசும் போது, ‘சூரிய சக்தி என்பது எதிர்காலம் அல்ல, நிகழ்காலம்’ எனக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் ஜே. ஜெயா, ‘மோட்டார் வாகனத் தொழில் பரிணாமத்தை உருவாக்குவதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தீர்வுகளை உருவாக்கும் விதமாக இந்த போட்டி செயல்படும்’ என்றார்.
நாடு முழுவதும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய சூரிய சக்தி மின்சார வாகனங்கள், நிகழ்ச்சியில் கண்கவர் காட்சியாக மாறின. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, எதிர்காலத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், மாணவர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.