சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைக்க ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் புதிய முதலீடுகளை செய்ய பலர் தயங்குவதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை, சோலார் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் 7,000 மெகாவாட்டுக்கு அதிகமாக சோலார் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி உள்ளது. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதகுறித்து சோலார் மின் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சி காலத்தில் குறிப்பாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைப்பதற்காக சோலார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அப்போது ஒவ்வொரு மெகாவாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கட்சி நிதியாக பெறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. தேர்தலுக்கு பின் புதிதாக தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் திமுக ஆட்சி காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் சோலார் மின் உற்பத்தித்துறையில் புதிதாக முதலீடு செய்ய பலருக்கு ஆர்வம் உள்ள போதும் முதலீடு செய்ய தயங்குகின்றனர். தமிழக முதல்வர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சோலார் மின் உற்பத்தி திட்டங்களில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.