கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து நிலவும் வெப்ப அலை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. சில இடங்களில் நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு போய் விட்டன. மாவட்டத்தின் முக்கிய அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கோவை மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மழைப்பொழிவு குறைவாக இருந்ததாலும், குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதாலும், அணையின் நீர்மட்டம் இந்த மாத தொடக்கத்திலேயே 12 அடிக்கும் குறைவாக பதிவானது. 50 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில், கடந்த 3-ஆம் தேதி 11.91 அடி நீர் மட்டம் காணப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அணையின் நீர்மட்டம் 10 முதல் 12 அடிக்குள் மாறுபட்டு வந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி 10.79 அடியாக பதிவாகியுள்ளது.
தற்போது குடிநீர் தேவைக்காக தினசரி சுமார் 4.2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், வரவிருக்கும் தென்மேற்கு பருவமழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வரை பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பில்லூர் அணை மூலம் குடிநீர் விநியோகம் ஓரளவு சீராக இருந்தாலும், குடிநீர் தேவையைத் தவிர்த்து மற்ற தேவைகளுக்கு தண்ணீரை வீணாக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
