கோவையில் இரண்டாம் கட்டமாக, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் 50,648 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின், இரண்டாம் கட்டத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பவன்குமார் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டு மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 4,25,705 மகளிருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 என ஒரு வருடத்திற்கு ரூ.510.84 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
தொடர்ந்து 2ம் கட்டமாக கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய 1,74,599 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 50,648 மகளிருக்கு தற்போது 2ம் கட்டமாக மாதம் ரூ.1000 என ஒரு மாதத்திற்கு ரூ.5.06 கோடி வீதமும், ஆண்டிற்கு ரூ.60.77 கோடி மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட உள்ளது.
கோவையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என மொத்தம் 4,76,353 மகளிருக்கு, ஒரு மாதத்திற்கு ரூ.47.63 கோடி தொகையும், ஒரு ஆண்டிற்கு ரூ.571 கோடி தொகையானது வழங்கப்படுகிறது.
