சில மொபைல் செயலிகள் மூலம் ரூ.10 முதல் பல ஆயிரங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நமக்கு தேவைப்படும் போது அதனை விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றிக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற மனநிலை மக்களிடையே ஆழமாக பதிந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது.

அமெரிக்க பங்குச் சந்தையின் தாக்கம் மற்றும் தங்கத்தில் அதிகளவில் நடைபெறும் முதலீடுகள் காரணமாக விலையேறுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதை வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைவது இல்லை.

தங்கத்தில் பல்வேறு வழிகளில் மக்கள் முதலீடு செய்கின்றனர். ஆபரணங்கள், தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள், டிஜிட்டல் தங்கம், கோல்ட் பண்டுகள், தங்கப் பத்திரங்கள் எனப் பல வகைகளில் தங்க சேமிப்பு நடைபெறுகின்றன.

இன்றைய பொருளாதார சூழலில், ஒரு பெரிய தொகை கொடுத்து தங்கம் வாங்குவது பலருக்கும் எளிதான விஷயம் அல்ல. இதனால், பலரும் ஆன்லைன் வழியாக டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் போன்ற புதிய முதலீட்டு வழிகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை நேரடியாக கையில் வைத்திருக்காமல், டிஜிட்டல் வடிவில் சேமிக்கும் ஒரு முறையாகும். சில மொபைல் செயலிகள் மூலம் ரூ.10 முதல் பல ஆயிரங்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. நமக்கு தேவைப்படும் போது அதனை விற்று பணமாக்கலாம் அல்லது தங்கமாக மாற்றிக் கொள்ளலாம். டிஜிட்டல் கோல்டுக்கு 3 சதவீத ஜி.எஸ்.டி வரியும் உண்டு.

இந்தியாவில் சுமார் 8 கோடி டிஜிட்டல் தங்க கணக்குகள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. தங்க நகை கடைகள், நிறுவனங்கள், யு.பி.ஐ செயலிகள் டிஜிட்டல் தங்க திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் சேமிப்பில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல கட்டுப்பாடற்ற ஆன்லைன் தளங்கள் வழங்கும் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை. இதில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது.

தங்கப் பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின்கீழ் டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை. இவை செபி கட்டுப்பாட்டின் கீழ் வராது. அங்கீகரிக்கப்படாத முறையில் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மூலம் வாங்கப்படும் டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானது இல்லை என செபி எச்சரித்துள்ளது.