கோவையில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவிகளை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை மாவட்டம் மலை அடிவாரப் பகுதிகளில் சமீப காலமாக யானை தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள்  அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலியூர் பகுதியைச் சேர்ந்த ரத்னா, செல்வி ஆகியோர் வீட்டின் அருகே குப்பைகளைக் கொட்டச் சென்ற நிலையில் கடந்த வாரத்தில் காட்டு யானை தாக்கி இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தகவலை அறிந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் நிதி உதவியும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.