கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக ரூ.118.14 கோடி மதிப்பீட்டில் 2051 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 3456 எண்ணிக்கையிலான சுமார் 503.67 கிமீட்டர் நீளத்திற்கு மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் வகையில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, சுமார் 3296 பணிகள் 477.32 கிமீட்டர் நீளத்திற்கு முடிக்கப்பட்டு, மீதமுள்ள 160 எண்ணிக்கையிலான சாலைகள் 27.43 கி.மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வரும் 31ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1847 எண்ணிக்கையிலான சாலைகள், 254.54 கிமீட்டர் நீளத்திற்கு, ரூ.106.14 கோடி மதிப்பீட்டில், தார்சாலைகள், சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் 1379 எண்ணிக்கையிலான தார்சாலைகள், 204.94 கிமீட்டர் நீளத்திற்கும் மற்றும் 468 எண்ணிக்கையிலான சிமெண்ட் சாலைகள் 49.60 கிமீட்டர் நீளத்திற்கும் புதுப்பிக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
தற்போது 204 எண்ணிக்கையிலான சாலைகள் 24.10 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பதற்காக நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.118.14 கோடி மதிப்பீட்டில் 2051 எண்ணிக்கையிலான 229.04 கி.மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அனைத்து சாலை சீரமைக்கும் பணிகளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
